ADDED : ஆக 07, 2024 10:24 PM
ரோஸ் அவென்யூ:ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் அடித்தள கட்டட உரிமையாளர்கள் ஜாமின் மனுக்கள் மீது பதில் மனுத் தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் நாளை வரை அவகாசம் அளித்துள்ளது.
ஜூலை 27 அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, பழைய ராஜேந்தர் நகரில் உள்ள ராவ்வின் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்ததில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் பயிற்சி மையத்தின் அடித்தள கட்டட இணை உரிமையாளர்கள் பர்விந்தர் சிங், தஜிந்தர் சிங், ஹர்விந்தர் சிங், சர்ப்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., நேற்று முறைப்படி துவங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அடித்தள கட்டட இணை உரிமையாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, செஷன்ஸ் நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நாளைக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.,க்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., இன்னும் வழக்குப் பதிவு செய்யாததால், கட்டட இணை உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.