வீட்டின் மாடியில் கிரிக்கெட் வீரர் ஓவியம் சமூக ஊடகங்களில் வைரல்
வீட்டின் மாடியில் கிரிக்கெட் வீரர் ஓவியம் சமூக ஊடகங்களில் வைரல்
ADDED : மே 16, 2024 02:11 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே, வீட்டின் மொட்டை மாடியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் ஓவியம் வரைந்துள்ளது, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பழிப்புரம் அழியன்னுாரை சேர்ந்தவர் சுஜித், 30. ஓவியக் கலைஞரான இவர், வீட்டின் மாடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் பிரம்மாண்ட ஓவியம் வரைந்தார்.
இதை, அவரது நண்பர்கள் 'டிரோன்' கேமராவில், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். ஒரு மணி நேரத்துக்குள் இதை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். வைரல் ஆன இந்த வீடியோவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரபூர்வ, 'எக்ஸ்' தள பக்கத்திலும் பதிவிட்டு உள்ளனர். அத்துடன், சுஜித்திற்கு நன்றியை தெரிவித்து, தன் மகிழ்ச்சியை அறிவித்து உள்ளார் சஞ்சு சாம்சன்.
இதுகுறித்து, சுஜித் கூறியதாவது:
வீட்டின் மொட்டை மாடியில், சஞ்சு சாம்சனின் உருவத்தை, 30 அடியில் ஓவியமாக வரைந்தேன். 'எமெல்ஷன்' பெயின்ட் பயன்படுத்தி வரைந்தேன். இதை வரைய, ஐந்து நாள் தேவைப்பட்டது. எவ்வளவு தூரத்தில் இருந்தும் இதை பார்க்க முடியும் வகையில் வரைந்து உள்ளேன்.
இதை, சஞ்சு சாம்சன் பார்த்து பதில் அளிப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவரின் பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறது. முன்னதாக 'கேரளா பிளாஸ்டர்' கால்பந்து அணியின் பயிற்சியாளர் இவான் வுக்கோவமனோவிக், மலையாள திரைப்பட நடிகர்களான மம்மூட்டி, டொவினோ ஆகியோரின் ஓவியங்களும் இது போல் வரைந்து உள்ளேன்.
இவ்வாறு கூறினார்.