'ஏசி' பெட்டியை ஆக்கிரமித்த கூட்டம் முன்பதிவு செய்த பயணியர் அவதி
'ஏசி' பெட்டியை ஆக்கிரமித்த கூட்டம் முன்பதிவு செய்த பயணியர் அவதி
ADDED : மே 26, 2024 02:20 AM
பாட்னா, பீஹாரில், விரைவு ரயில் ஒன்றில் 'ஏசி' மூன்றாம் வகுப்பு பெட்டியில், டிக்கெட் ஏதுமின்றி ஏராளமானோர் பயணம் செய்ததால், முன்பதிவு செய்த பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ரூகாரில் இருந்து டில்லி நோக்கி, பிரம்மபுத்திரா விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில், சமீபத்தில் பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தன் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேருடன் டில்லிக்கு செல்ல ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார்.
திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் அந்த ரயிலில் ஏற, விஜயகுமார் தன் குடும்பத்துடன் சென்றார்.
அப்போது, அவர் பயணிக்க இருந்த பெட்டிக்குள் சென்று பார்த்தபோது ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக நின்றபடி இருந்தனர்.
தன் குடும்பத்திற்காக முன்பதிவு செய்த இருக்கைகளையும் பலர் ஆக்கிரமித்து இருந்ததை பார்த்து விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தன் மொபைல் போனில் வீடியோ எடுத்த விஜயகுமார், தாங்கள் சந்தித்த இடையூறுகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இதில் அவர், 'முன்பதிவு செய்யப்பட்ட ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குள், டிக்கெட் எடுக்காதவர்கள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். விதிமுறைகளை யாரும் மதிக்கவில்லை. இதனால், முன்பதிவு செய்த நாங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களால் இருக்கையில் அமர கூட முடியவில்லை.
'இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ரயில்வே நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.