ADDED : ஆக 10, 2024 06:29 AM
பெங்களூரு: பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில் அபாய எச்சரிக்கை பட்டன், ஜி.பி.எஸ்., பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ள போக்குவரத்து துறை, செப்டம்பர் 10 வரை இதற்கு அவகாசம் அளித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் யோகேஷ் கூறியதாவது:
பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில், பெண்கள், சிறார்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த வாகனங்களில் அபாய எச்சரிக்கை பட்டன், ஜி.பி.எஸ்., பொருத்துவது கட்டாயம்.
இதற்கு செப்டம்பர் 10 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பொருத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக விதிமுறைப்படி, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி வாகனம், தனியார் வாகனங்கள், மேக்சி கேப், தேசிய பர்மிட் வைத்துள்ள சரக்கு வாகனங்களுக்கு, வி.எல்.டி., மற்றும் அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்துவது கட்டாயம்.
இந்த சாதனங்கள் பொருத்துவதால், வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய, வாகனங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண, உதவியாக இருக்கும்.
பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில், பெண்கள், சிறார்கள் என, யாருக்காவது பிரச்னை ஏற்பட்டால், அபாய எச்சரிக்கை பட்டனை அழுத்தினால், போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும். உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே செப்டம்பர் 10க்குள், வி.எல்.டி., மற்றும் அபாய எச்சரிக்கை பட்டன் பொருத்த வேண்டும். பொருத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.