காங்., அரசுக்கு எதிரானவர் கவர்னர்; அமைச்சர் பரமேஸ்வர் கண்டுபிடிப்பு
காங்., அரசுக்கு எதிரானவர் கவர்னர்; அமைச்சர் பரமேஸ்வர் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 24, 2024 02:01 AM

பெங்களூரு: ''மாநில அரசின் 11 மசோதாக்களை திரும்பி அனுப்பிய கவர்னரின் முடிவு, காங்கிரஸ் அரசுக்கு எதிரானவர் என்பதை காட்டுகிறது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
ஒப்புதலுக்காக காங்கிரஸ் அரசு அனுப்பிய, 11 சட்ட மசோதாக்களை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
நாங்கள் அனுப்பிய மசோதாக்களில் ஓரிரு மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டாலும் பரவாயில்லை. சாதாரண மசோதா உட்பட அனைத்தையும் கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அரசுக்கு, அவர் எதிரானவர் என்பது தெளிவாக தெரிகிறது.
இயற்கையாகவே அரசுக்கும், கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை என்றால், இதுபோன்ற நிலைமை ஏற்படலாம். இந்த மசோதாக்களில் சிலவற்றில், விளக்கம் தேவைப்படலாம்.
துறை ரீதியான விஷயம் தொடர்பாக விவாதிக்க டில்லி செல்கிறேன்; கட்சி மேலிட தலைவர்கள் அழைப்பின்படி, முதல்வர், துணை முதல்வர் செல்கின்றனர். எதை பற்றி விவாதிப்பர் என்பது தெரியவில்லை.
தேசிய அளவில் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கலாம் அல்லது விவாதிக்காமலும் இருக்கலாம். நாங்கள் 'இண்டி' கூட்டணியில் உள்ளோம். பல மாநிலங்களில், கவர்னரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஜிந்தாடுக்கு நிலம் கொடுப்பது தொடர்பாக, கடந்த காலங்களில், நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தது உண்மை தான். சில கேள்விகளுக்கு தெளிவு கிடைத்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல நாடுகளில் இருந்தும் முதலீட்டாளர்கள் வருவர். அவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும்.
இதில் தண்ணீர், நிலம், மின்சாரம் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நடவடிக்கைகளால், நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு வெளியேறின. தற்போது அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

