ADDED : ஆக 22, 2024 03:57 AM
பேட்ராயனபுரா: திருமணமான பெண்ணை பின்தொடர்ந்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பெண்ணின் கணவர், சகோதரர் உட்பட மூன்று பேரை போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு, பந்தரபாளையாவைச் சேர்ந்தவர் கார்த்திக், 28; ஆட்டோ டிரைவர். இவரது வீடு உள்ள பகுதியில், திருமணமான பெண் கணவருடன் வசிக்கிறார்.
அந்த பெண் மீது, கார்த்திக் கண் வைத்தார். திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் தனது வலையில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்து, பெண்ணை தினமும் பின்தொடர்ந்து சென்றார்.
இதுபற்றி பெண்ணின் கணவர் சதீஷ், 32, சகோதரர் வினோத், 35 ஆகியோருக்கு தெரிந்தது. கார்த்திக்கை எச்சரித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சவாரி சென்றுவிட்டு, ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்.
ஆட்டோவை மறித்த வினோத், சதீஷ், சதீஷின் நண்பர் சூர்யா ஆகியோர், கார்த்திக்கிடம் தகராறு செய்தனர். பின், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
உயிருக்கு போராடிய கார்த்திக்கை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள வினோத், சதீஷ், சூர்யாவை பேட்ராயனபுரா போலீசார் தேடி வருகின்றனர்.