கடும் விமர்சனங்களால் தேர்தல் கமிஷன் வேதனை! தொகுதி வாரியாக ஓட்டு விபரம் வெளியீடு
கடும் விமர்சனங்களால் தேர்தல் கமிஷன் வேதனை! தொகுதி வாரியாக ஓட்டு விபரம் வெளியீடு
ADDED : மே 26, 2024 12:37 AM
புதுடில்லி :இதுவரை ஓட்டுப்பதிவு முடிந்துள்ள, ஐந்து கட்டத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் குறித்த முழு விபரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தேர்தல் கமிஷனுக்கு அவப் பெயரை ஏற்படுத்த திட்டமிட்டு முயற்சிகள் நடப்பதாக, அது வேதனை தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், நேற்றுடன் ஆறு கட்ட ஓட்டுப் பதிவு முடிந்து உள்ளது. ஓட்டுப் பதிவு முடிந்த, முதல் ஐந்து கட்டங்கள் தொடர்பாக, ஒட்டு மொத்த ஓட்டு சதவீத விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், தொகுதி வாரியாக ஓட்டு சதவீத தகவல்களை வெளியிட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதம்
இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் ஐந்து கட்டங்களில், ஒவ்வொரு தொகுதி வாரியாக, அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கை, பதிவான ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகிய விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்ட முயற்சிகள் நடந்துள்ளன. தேர்தல்களை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து முயற்சிகளையும் தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், ஓட்டுப் பதிவு முடிந்தபின், 17சி என்ற படிவத்தில், எவ்வளவு ஓட்டுகள் பதிவாயின என்ற தகவல் பதிவு செய்யப்படும். இதில், கட்சிகளின் தேர்தல் ஏஜென்ட்களின் கையெழுத்தும் இருக்கும். அவர்களுக்கும் ஒரு நகல் வழங்கப்படும்.
தேர்தல் கமிஷனின் செயலியில், இவ்வாறு ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் பதிவாகும் ஓட்டுகள் குறித்த விபரங்கள், இரண்டு மணிக்கு ஒருமுறை கொடுக்கப்பட்டு வருகிறது.
பல காரணம்
தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு குறித்த தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளின் தகவல்களும், பதிவு செய்யப்பட்ட பின், அது தொகுத்து வழங்கப்படுகிறது.
ஓட்டுச் சாவடி அமைந்துள்ள இடம், ஓட்டுப் பதிவு முடிந்த நேரம், மறுஓட்டுப் பதிவு உட்பட பல காரணங்களால் ஓட்டுப் பதிவு நடந்த நாளில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு, சில நேரத்தில் அதற்கு மேற்பட்ட நாட்களில்தான், முழுமையான தகவல்கள் தொகுக்கப்பட்டு வழங்க முடியும்.
ஓட்டுப் பதிவு முடிந்து, 17சி படிவத்தில் கையெழுத்து போட்ட பின், ஓட்டுப் பதிவு தொடர்பான தகவல்களில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.