ஆய்வுக்கு திட்டமிட்ட கவர்னர் தடுத்தது தேர்தல் கமிஷன்?
ஆய்வுக்கு திட்டமிட்ட கவர்னர் தடுத்தது தேர்தல் கமிஷன்?
ADDED : ஏப் 18, 2024 01:00 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் லோக்சபா தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், அப்பகுதிக்கு செல்வது தேர்தல் நடத்தை விதிமீறல் என அம்மாநில கவர்னர் அனந்த போசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியதை தொடர்ந்து, கவர்னர், தன் பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், முதற்கட்டமாக மூன்று தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், பதற்றம் நிறைந்த கூச் பெஹார் லோக்சபா தொகுதி அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய, மாநில கவர்னர் அனந்த போஸ் முடிவு செய்தார். இதன்படி, அவர் இன்று காலை அங்கு புறப்பட்டு சென்று, தேர்தல் முடியும் வரை அத்தொகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்வதாக இருந்தது.
இது தொடர்பாக தகவல் அறிந்த தலைமை தேர்தல் கமிஷன், ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்துவது தேர்தல் நடத்தை விதிமீறல் எனவும், அங்கு செல்ல வேண்டாம் எனவும் கவர்னர் அனந்த போசுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதை ஏற்று கவர்னர் மாளிகை, மாநில கவர்னரின் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

