UPDATED : மே 11, 2024 11:07 PM
ADDED : மே 11, 2024 11:04 PM

புதுடில்லி : ஓட்டுப்பதிவு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அறிவுரை என்ற பெயரில் தேர்தல் கமிஷன் மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடக்கிறது. இதுவரை மூன்று கட்டம் முடிந்துள்ளது. பதிவான ஓட்டுகள் எத்தனை, சதவீதம் என்ன என்பதை தேர்தல் கமிஷன் உடனடியாக வெளியிடவில்லை.
தாமதமாக வெளியிட்ட தகவலிலும் முரண்பாடுகள் இருந்தன என்று எதிர்க்கட்சிகள் கூறின. இது தொடர்பாக, 'இண்டியா' கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார்.
முரண்பாடுகள்
'ஓட்டுப்பதிவு முடிந்த 24 மணி நேரத்துக்குள் இறுதி தகவலும், ஓட்டு சதவீதமும் வெளியிடுவது வழக்கம். இந்த தேர்தலில், 11 நாள் தாண்டிய பிறகு தேர்தல் கமிஷன் தகவல் தருகிறது. எதனால் இவ்வளவு தாமதம் என்று காரணம் சொல்லவில்லை.
'தாமதமாக வெளியிட்ட தகவல்களிலும் முரண்பாடுகள் உள்ளன. இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் கமிஷனை நாம் வலியுறுத்த வேண்டும்' என கார்கே குறிப்பிட்டிருந்தார்.
எந்த கட்சி தலைவரும் இதற்கு பதில் அளிப்பதற்குள், தேர்தல் கமிஷனே முன்வந்து அறிக்கை வெளியிட்டது.
'தேர்தலில் குழப்பமும், இடையூறும் உருவாக்கும் வகையில் கார்கே கருத்து கூறியுள்ளார். அவரின் கடிதம், தேர்தல் நடவடிக்கை மீதான அத்துமீறல். தேர்தல் நடத்தை விதிகளை பாதிக்கும் செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என அதில் எச்சரித்துள்ளது.
இது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் கருத்துக்கு எதிராக இதுவரை எந்த தேர்தல் கமிஷனும் இவ்வாறு அறிக்கை வெளியிட்டது கிடையாது. இதையடுத்து, தேர்தல் கமிஷனுக்கு கார்கே நேரடியாக பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
நேரில் வந்து கொடுக்கும் புகார்களையே கண்டுகொள்ளாத தேர்தல் கமிஷன், என் கூட்டணி கட்சிகளுக்கு நான் எழுதிய கடிதத்துக்கு பதில் அளிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
தேர்தல் நடத்துவது எவ்வளவு கடினமான வேலை என்பதும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பணிபுரியும் சூழல் எந்தளவு அழுத்தமானது என்பதும் எனக்கு தெரியும்.
தேர்தல் பற்றி நாட்டு மக்கள் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என ஒரு புறம் தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்கிறது. மறுபுறம், மக்களின் நியாயமான கேள்வியை எதிரொலிக்கும் கட்சியை அறிவுரை என்ற பெயரில் மிரட்டுகிறது.
அரசியல் சாசனப்படி நேர்மையாக நியாயமாக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதை தேர்தல் கமிஷன் ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும், ஆளுங்கட்சி தலைவர்களின் அப்பட்டமான மதவாத பேச்சுகளுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது புதிராக உள்ளது.
ஒரே நாளில் வெளியிட வேண்டிய தகவல்களை பல நாட்கள் கழித்து வெளியிட என்ன காரணம் என்று மக்கள் கேட்கின்றனர்.
முதலில் வெளியிட்ட சதவீதத்துக்கும், தாமதப்படுத்தி வெளியிட்ட சதவீதத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் வந்தது எப்படி என்றும் வாக்காளர்கள் கேட்கின்றனர். பதில் சொல்ல வேண்டியது கமிஷனின் கடமை.
கூட்டறிக்கை
தேர்தல் கமிஷன் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதனால், கமிஷனை வலுப்படுத்த வேண்டும்.
இதில் காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷன் பக்கம் நிற்கிறது; ஆனால், தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் அமைப்புகளும் இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன. இந்திய பத்திரிகையாளர் சங்கம், வெளிநாட்டு செய்தியாளர் சங்கம், பெண் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளன.