அடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல் கைது வாரன்ட் கேட்டு அமலாக்கத்துறை மனு
அடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல் கைது வாரன்ட் கேட்டு அமலாக்கத்துறை மனு
ADDED : ஏப் 12, 2024 01:11 AM

புதுடில்லி:டில்லி வக்ப் வாரிய நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கானுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
டில்லி வக்ப் வாரியத்தின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், டில்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் பெயர் இடம்பெறவில்லை.
இந்த வழக்கின் விசாரணைக்காக எம்.எல்.ஏ., அமானதுல்லா கானுக்கு அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் இதுவரை ஆறு சம்மன்களை அனுப்பியது. ஆனாலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது. வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அமானதுல்லா கானுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதிய மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தது. இந்த மனுவில், 'விசாரணைக்கு அமானதுல்லா கான் ஆஜராகாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
'குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களை விட அமானதுல்லா கானின் பங்களிப்பு அதிகம்' என, அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, கோரிக்கை தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த மனு மீதான விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையின் பிடியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், மற்றொரு எம்.எல்.ஏ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

