போலீசில் புகார் செய்ததால் குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
போலீசில் புகார் செய்ததால் குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
ADDED : செப் 14, 2024 08:24 AM
யாத்கிர்: பேச்சுக்கு வர மறுத்ததுடன், வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்ததால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு உள்ளனர்.
யாத்கிர் மாவட்டம், ஹூன்சகி அருகே பப்பரகா கிராமத்தில் வசிக்கும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் 15 வயது சிறுமி. இவரும், மற்றொரு ஜாதியைச் சார்ந்த வாலிபரும் காதலித்தனர்.
திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன், வாலிபர் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கருவுற்றார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்ய வாலிபர் மறுத்து விட்டார். இதனால் அவர் மீது புகார் அளிக்க சிறுமியின் பெற்றோர் முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த வாலிபரின் சமூகத்தினர், பேச்சுக்கு வரும்படி சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
வாலிபர் மீது கடந்த மாதம் 12ம் தேதி நாராயணபுரா போலீசில் புகார் செய்தனர். வாலிபர் கைது செய்யப்பட்டார். இதனால், வாலிபர் சார்ந்த சமூகத்தினர் கோபம் அடைந்தனர்.
தங்கள் பேச்சைக் கேட்காமல் போலீசில் புகார் செய்ததால், சிறுமியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு கடைகளில் எந்த பொருட்களும் தரக்கூடாது என, கடைக்காரர்களிடம் கூறி உள்ளனர். தங்களுக்கு நியாயம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்ட சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.