ஜம்மு - காஷ்மீரில் ஓய்ந்தது முதற்கட்ட தேர்தல் பிரசாரம்
ஜம்மு - காஷ்மீரில் ஓய்ந்தது முதற்கட்ட தேர்தல் பிரசாரம்
ADDED : செப் 17, 2024 01:45 AM

கிஷ்த்வார், ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்ட தேர்தல் நாளையும், 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் அடுத்தக் கட்ட தேர்தல்களும் நடக்க உள்ளன.
தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ., மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியும் களத்தில் இருப்பதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
முதற்கட்ட தேர்தல் நடக்கும் 24 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று நான்கு இடங்களில் பிரசாரம் செய்தார்.
இட ஒதுக்கீடு
கிஷ்த்வாரில் நேற்று நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதத்தை வளர்த்து வந்துள்ளன.
காஷ்மீர் பண்டிட்களை புறக்கணித்தது, வன்முறையை பரவச் செய்தது, இடஒதுக்கீட்டை நிராகரித்தது போன்றவற்றில் ஈடுபட்ட இந்த இரு கட்சிகளும் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
குர்ஜார் பிரிவினர் இடங்களில் கைவைக்காமல், பகாடி பிரிவினருக்கு, இடஒதுக்கீட்டை அளித்துள்ளோம். தற்போது உங்களுடைய குழந்தைகளும் கலெக்டர், எஸ்.பி., ஆக முடியும். இதை உறுதி செய்தது பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல்களை அவர் நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்கினோம். இதையடுத்தே, உங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.
ஆனால், மீண்டும் அந்தச் சட்டப் பிரிவை கொண்டு வருவோம் என, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவை கூறுகின்றன. 370வது சட்டப் பிரிவு என்பது வரலாறாக மாறிவிட்டது. அதை மீண்டும் அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்., தேர்தல் அறிக்கை
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில், 'இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் அனைத்து விளைபொருட்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். ஆப்பிளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக, கிலோவுக்கு 72 ரூபாய் நிர்ணயிக்கப்படும்.
'நிலமற்றவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆகியோருக்கு, ஆண்டுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். வேலையற்ற இளைஞர்களுக்கு, ஒராண்டுக்கு மட்டும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்' என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.