ADDED : ஆக 27, 2024 04:13 AM
சித்ரதுர்கா : மும்பை சைபர் கிரைம் போலீஸ் என்று பேசி, சித்ரதுர்கா டாக்டரிடம் 1.27 கோடி ரூபாயை பறித்த மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா டவுனில் வசிப்பவர் சீனிவாஸ் ஷெட்டி, 60; டாக்டர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீனிவாஸ் ஷெட்டியின் மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் தன்னை, மும்பை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறினார்.
உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி, ஒரு கும்பல் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுகிறது. இதனால் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார். விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறிய சீனிவாஸ் ஷெட்டி, தனது வங்கிக் கணக்கு விபரங்களை கூறி உள்ளார். மேலும் மர்ம நபர் அனுப்பிய ஒரு லிங்கையும் 'கிளிக்' செய்தார்.
இந்நிலையில், 'உங்கள் வங்கி கணக்கில் இருந்து, 70 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது' என, சீனிவாஸ் ஷெட்டிக்கு நேற்று முன்தினம் குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தார்.
மர்ம நபர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததால் பணம் வங்கி கணக்கிலிருந்து சென்றது தெரிந்தது. சிறிது நேரத்தில் மேலும் 57 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 1.27 கோடி ரூபாயை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசில் சீனிவாஸ் ஷெட்டி புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.