ADDED : மே 10, 2024 05:23 AM
தங்கவயல் : தங்கச்சுரங்க முன்னாள் தொழிலாளர்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்கக் கோரி, தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தங்கவயல் தங்கச்சுரங்கம் 2001ல் மூடப்பட்டது. அப்போது தொழிலாளர்களுக்கு 50 சதவீத இறுதி தொகை மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 50 சதவீத தொகை, அதற்கான வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று 2021ல், முன்னாள் தொழிலாளர்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
விசாரணையில், மத்திய அரசின் சுரங்கத் துறை மற்றும் தங்கச் சுரங்க நிறுவனத்தின் அதிகாரிகள் ஆஜராகினர். தொழிலாளர்கள் சார்பில் தங்கச் சுரங்க நிறுவன முன்னாள் துணை பொது மேலாளராக இருந்த வக்கீல் சென்னமாலிகா ஆஜரானார்.
இருதரப்பு வாதங்கள் முடிந்து, மார்ச்சில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கோடை விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று பிற்பகலில், நீதிபதி சி.எம்.பொன்னப்பா தீர்ப்பு அளித்தார். தீர்ப்பின் நகல் இரண்டொரு நாளில் வழங்கப்படும் என தெரிகிறது.
வக்கீல் சென்னமாலிகா கூறுகையில், ''தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. முழு விபரம் தீர்ப்பின் நகல் கிடைத்த பின்னரே தெரிய வரும்,'' என்றார்.
தங்கச்சுரங்க வழக்கில் இறுதி தொகையை பெறுவதற்கு, எஸ்.டி.பி.பி., என்ற ஸ்பெஷல் டெர்மினல் பெனிபிட் பேக்கேஜ் திட்டத்தில் ஓய்வு பெற்ற 3,200 தொழிலாளர்கள் காத்திருந்தனர். இவர்களில் 750 பேர், இறுதி தொகையை பெறாமலேயே இறந்து விட்டனர். மீதி 2,450 பேரும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் நிலுவைத் தொகையை பெற, காத்திருக்கின்றனர்.