மஹதாயி திட்டத்துக்கு முட்டுக்கட்டை பிரதமரிடம் முறையிட அரசு முடிவு
மஹதாயி திட்டத்துக்கு முட்டுக்கட்டை பிரதமரிடம் முறையிட அரசு முடிவு
ADDED : செப் 06, 2024 05:49 AM
பெங்களூரு: மஹதாயி விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோர, கர்நாடக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை நடந்தது. மாலை 3:30 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டம், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
இந்த கூட்டத்தில், மொத்தம் 24 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின், இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
மஹதாயி திட்டத்துக்கு, தேசிய வன விலங்கு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனைத்துக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அனுமதி கோர முடிவு செய்யப்பட்டது
வெவ்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வரும் 59 ஆயுள் தண்டனை கைதிகளை, நன்னடத்தை அடிப்படையில், விடுதலை செய்ய தீர்மானம்
உடுப்பி மாவட்டம், கார்கலாவில், 27.97 கோடி ரூபாயில், ஜவுளி பூங்கா
மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளிகளில், மாணவர்களுக்கு மெத்தை, தலையனை வழங்க, 18.54 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல்
'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ், பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, மீதி 5 கிலோ அரிசிக்கு பதில், 170 ரூபாய் பணம் வழங்கப்படும் திட்டம் தொடரும்
பெங்களூரு கித்வாய் மருத்துவமனைக்கு, 70 கோடி ரூபாய் செலவில், ரேடியோதெரபி சிகிச்சை மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும்
மைசூரில், 100 படுக்கைகள் கொண்ட, சிறுநீரக மருத்துவமனை, 117.71 கோடி ரூபாயில் கட்டுவதற்கு ஒப்புதல்
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், மாநிலம் முழுதும் 25 கோடி ரூபாயில், 2,500 காபி மையங்கள் அமைக்க அனுமதி
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியில் 100 கோடி ரூபாயில் 600 கைதிகள் அடைக்கும் புதிய மத்திய சிறை அமைக்க ஒப்புதல்.
இவ்வாறு கூறினார்.