14 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம்... ஓய்ந்தது! பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டுப்பதிவு
14 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம்... ஓய்ந்தது! பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டுப்பதிவு
ADDED : மே 06, 2024 05:38 AM

பெங்களூரு : கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக, 14 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
227 வேட்பாளர்கள்
தேசிய கட்சிகளான பா.ஜ., - காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த., இவற்றில் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. 206 ஆண்கள், 21 பெண்கள் என மொத்தம் 227 பேர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட தேசிய, மாநில தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி., ராகுல், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரியங்கா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட பலரும் பிரசாரம் செய்தனர்.
கண்காணிப்பு தீவிரம்
ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன், பிரசாரம் ஓய வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளிலும் நேற்று மாலை 6:00 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது.
இறுதி நாளான நேற்று, தாவணகரேவில் முதல்வர் சித்தராமையா; பெலகாவியில் துணை முதல்வர் சிவகுமார்; ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா; உத்தர கன்னடாவில் சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி; கொப்பாலில் யதுவீர்; பல்லாரியில் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர்.
பிரசாரம் ஓய்ந்த பின், தொகுதிக்குஅப்பாற்பட்டவர்கள், வெளியேறினர்.
மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைகேட்டை தடுக்கும் வகையில், வருமான வரி, கலால், பறக்கும் படை மற்றும் போலீசார் கழுகு பார்வையுடன் கண்காணித்து வருகின்றனர்.
துணை ராணுவம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 'விவிபேட்' இயந்திரங்கள் உட்பட தேர்தலுக்கு தேவையான பொருட்கள், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளில் இருந்தும், இன்று ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.
சில பகுதிகளில் வாக்காளர்கள், தொண்டர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில், பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளதால், தேர்தல் அதிகாரிகள் உஷாராக உள்ளனர்.
இதற்கிடையில், பெலகாவியில் பிரச்னை வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால், துணை ராணுவ பாதுகாப்பு போடும்படி, பா.ஜ., தரப்பில் தேர்தல் கமிஷனில் கடிதம் அளிக்கப்பட்டுஉள்ளது.
நட்டா மீது வழக்கு
குறிப்பிட்ட சமுதாயம் குறித்து விமர்சனம் செய்துள்ளதாக கூறி, காங்கிரஸ் சட்டப்பிரிவின் ரமேஷ் பாபு, பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் விஜயேந்திரா, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கியஸ்தர் அமித் மாளவியா மீது புகார் செய்தார்.
இதன் அடிப்படையில், அவர்கள் மீது, நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.