ADDED : மே 27, 2024 03:53 AM

பெங்களூரு : மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி தங்கிய ஹோட்டல் பில், 80 லட்சம் ரூபாயை செலுத்தா விட்டால், கர்நாடக காங்., அரசு மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, ஹோட்டல் நிர்வாகம் தயாராகி வருகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம், பண்டிப்பூரில் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தின் 50வது ஆண்டு பொன்விழா, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் பங்கேற்க வந்த அவர், மைசூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
பிரதமர் மோடியுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளும், அதே ஹோட்டலில் தங்கினர். சரணாலயத்தின் பொன்விழா நிகழ்ச்சி திட்டத்திற்கான செலவு 6.33 கோடி ரூபாய். இந்த செலவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால், நிகழ்ச்சியின் செலவுக்காக 3 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எச்சரிக்கை
இதற்கிடையில், பிரதமர் மோடியும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கிய ஹோட்டலுக்கு, 80 லட்சம் ரூபாய் வாடகை கட்டணம் செலுத்தப்படவில்லை. கட்டணத்தை கேட்டு ஹோட்டல் நிர்வாகம், கர்நாடக காங்., அரசுக்கு கடிதம் எழுதியது. இதுகுறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு, கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமோ, '80 லட்சம் ரூபாய் கட்டணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும்' என்று, கர்நாடக அரசிடம் தெரிவித்து விட்டது. ஆனால், இதுவரை கர்நாடக அரசு கட்டணத்தை செலுத்தவில்லை.
எனவே, 'வரும் 1ம் தேதியுடன் கட்டண தொகை, 18 சதவீத வட்டியுடன் 94.40 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடக அரசுக்கு ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்ட வல்லுனர்கள்
இதுகுறித்து, கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அளித்த பேட்டி:
பண்டிப்பூர் புலிகள் சரணாலய பொன்விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை. அப்போதைய பா.ஜ., அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூட அந்த விழாவில் பங்கேற்கவில்லை. அந்த விழாவில் அரசின் சின்னமும் பயன்படுத்தப்படவில்லை.
அந்த விழா முழுக்க, முழுக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் திட்டமாக இருந்தது. கட்டண பாக்கி கேட்டு, ஹோட்டல் நிர்வாகம், வனத்துறைக்கு கடிதம் எழுதியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கட்டண பாக்கியை விடுவிக்கும் விஷயத்தில் அரசு தலையிடவில்லை. இப்பிரச்னையை, ஹோட்டல் நிர்வாகத்துடன் பேசி இணக்கமான முறையில் தீர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹோட்டல் நிர்வாகம், அரசுக்கு கொடுத்த காலக்கெடு முடிய, இன்னும் ஆறு நாட்கள் உள்ளது. அதற்குள் அரசு கட்டணம் செலுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை செலுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க, ஹோட்டல் நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்காக, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, முதல்வர் சித்தர மையாவை இன்று மாலை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார்.

