ADDED : மே 06, 2024 03:33 AM
தொட்டபல்லாபூர : மனைவியை கொலை செய்து, காணாமல் போனதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின் கரேனஹள்ளியில் வசிப்பவர் ரவி, 25. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாய், தந்தை, உற்றார், உறவினர் இல்லாத வீணா, 19 என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீணா, ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 22ல், பணிக்கு சென்ற மனைவி காணாமல் போனதாக, தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் தேடி வந்தனர்.
ஒரு வாரத்துக்கு பின், துாபகெரே நரசிம்மனஹள்ளி வனப்பகுதியில், எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அது வீணா என்பதும், கணவரே கொலையாளி என்பது தெரிந்தது. ரவிக்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. மனைவிக்கு தெரிந்ததால், வீட்டில் தினமும் சண்டை நடந்தது.
ரவியின் பெற்றோரும், அறிவுரை கூறினர். ஏப்ரல் 22ல் மனைவி பணியாற்றும் நிறுவனத்துக்கு சென்ற ரவி, வீட்டுக்கு செல்லலாம் என, கூறி அழைத்து வந்தார். ஆனால் வனப்பகுதிக்கு அழைத்து சென்று, ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார்.
உடலை எரித்து விட்டு, போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை காணவில்லை என, நாடகமாடியது தெரியவந்தது. ரவியை போலீசார் கைது செய்தனர்.