திரிபுராவில் முடிவுக்கு வந்தது கிளர்ச்சி: கையெழுத்தானது அமைதி ஒப்பந்தம்
திரிபுராவில் முடிவுக்கு வந்தது கிளர்ச்சி: கையெழுத்தானது அமைதி ஒப்பந்தம்
ADDED : செப் 04, 2024 11:54 PM

புதுடில்லி: திரிபுராவில் தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை ஆகிய கிளர்ச்சி குழுக்கள், மத்திய - மாநில அரசுகளுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால், பல ஆண்டுகளுக்கு பின், கிளர்ச்சி குழுக்கள் இல்லாத மாநிலமாக திரிபுரா மாறி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை ஆகிய கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தன.
இந்த இரு கிளர்ச்சி குழுக்களும் வன்முறையை கைவிட்டு, அமைதி பாதையில் திரும்ப முடிவு எடுத்தன.
இந்நிலையில், டில்லியில் நேற்று பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு - திரிபுரா அரசு - தேசிய விடுதலை முன்னணி - அனைத்து திரிபுரா புலிப்படை இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, உள்துறை அமைச்சக அதிகாரிகள், இரு கிளர்ச்சி குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திரிபுராவில் கடைசி இரு கிளர்ச்சி குழுக்களும் சரணடைந்து விட்டன.
இதனால், பல ஆண்டுகளுக்கு பின், கிளர்ச்சி குழுக்கள் இல்லாத மாநிலமாக திரிபுரா மாறி உள்ளது.
இது குறித்து அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ''இது ஒரு வரலாற்று நாள். 35 ஆண்டுகளுக்கு பின், நம் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை ஆகியவை ஆயுதங்களை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப முடிவு எடுத்துள்ளன.
''பயங்கரவாதம், வன்முறை, மோதல்கள் இல்லாத, வளர்ந்த வடகிழக்கு மாநிலம் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, உள்துறை அமைச்சகம் அயராது உழைத்து வருகிறது,'' என்றார்.