ADDED : மே 12, 2024 07:08 AM
பெலகாவி: நிலத்தகராறில், சித்தப்பாவை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி, அதானியின், தபதபஹட்டி கிராமத்தில் வசித்த கேசவ் போசலே, 47. இவரது தந்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு, 75,000 ரூபாய் கொடுத்து நிலம் வாங்கினார். நிலத்தின் விலை அதிகரித்தால், ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்க, கேசவின் அண்ணன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையறிந்த கேசவ், 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். நிலத்தை எனக்கே விற்றுவிடுங்கள்' என, கேட்டுக்கொண்டார்.
இதற்கு அண்ணன் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. எனவே கேசவ், நீதிமன்றத்தை நாடி, 'நிலம் தனக்கு சொந்தமானது' என, வழக்கு தொடர்ந்தார்.
நிலத்தை அண்ணன் குடும்பத்தினரால் விற்க முடியவில்லை. இதனால் அண்ணன் மகன் கன்டோபா, 25, சித்தப்பா மீது கோபத்தில் இருந்தார். நேற்று முன் தினம் மாலை, கன்டோபா தன் சித்தப்பா கேசவை, மது அருந்தலாம் என கூறி, கிராமத்தின் அருகில் உள்ள தாபாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது கன்டோபா, நிலம் விஷயமாக பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபமடைந்த கன்டோபா, கல்லை எடுத்து சித்தப்பா தலையில் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஐகளி போலீசார், கன்டோபாவை கைது செய்தனர். அவரும் சொத்துக்காக சித்தப்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.