ADDED : மே 15, 2024 09:35 AM

மைசூரு, : நீண்ட தந்தங்களால் உணவு உண்பதற்கு சிரமப்பட்ட யானைக்கு வனத்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட ஹிரெகெரேியின் ஹங்கலாலா கிராமத்தில் நான்கு மாதங்களாக விளை நிலங்களை ஒற்றை யானை நாசம் செய்து வந்தது.
விவசாயிகள், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவிடம் புகார் அளித்தனர். அவர் உத்தரவின் பேரில், 25 நாட்களாக அந்த யானையை வனத்துறையினர் தேடி வந்தனர்.
மே 8ம் தேதி மைசூரு மாவட்டம், பண்டிப்பூர் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட கோபால சுவாமி மலை அருகில், கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட யானைக்கு, தும்பிக்கைக்கு இணையாக தந்தம் பெரிதாக வளர்ந்துள்ளதை வனத்துறையினர் பார்த்தனர். தும்பிக்கைக்கு இணையாக தந்தங்கள் வளர்ந்தால், தரையில் உள்ள புற்களை யானைகளால் உண்ண முடியாது.
அத்தகைய யானைகள், உணவுக்காக உயரமான மரங்களையே தேடும். அதனால் விவசாயிகள் விளைவிக்கும் தென்னை, வாழை மரங்கள் உள்ளிட்ட உயரமான மரங்களைத் தேடி வருகின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி அம்ரிதேஷ் கூறியதாவது:
சமீபத்தில் பிடிபட்ட யானையின் தந்தம் நீளமாக இருந்ததே, அது கிராமப்பகுதியை நோக்கி வந்ததற்கு காரணமாக இருந்ததை அறிந்தோம். எனவே அதன் தந்தத்தில் பாதியை, உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றுத் துண்டித்தோம்.
தந்தங்கள் துண்டிக்கப்பட்டதால், அந்த யானையால் இனி சுலபமாக புற்களை உண்ண முடியும். அதனால் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டுவிட்டோம்.
இனி யானையை பற்றி விவசாயிகள் அஞ்ச வேண்டாம். எனினும் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

