தாலி கட்டும் போது பறித்த காதலன் திருமணத்தை நிறுத்தி பரபரப்பு
தாலி கட்டும் போது பறித்த காதலன் திருமணத்தை நிறுத்தி பரபரப்பு
ADDED : மார் 22, 2024 05:57 AM
ஹாசன்: சினிமாவில் நடப்பதை போன்று, தாலி கட்டும் போது, மணமகளின் காதலன் வந்து, தகராறு செய்து திருமணத்தை நிறுத்தினார்.
ஹாசன் புறநகரின், கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன், 25. இவரும், ஹாசன், பேலுாரை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும், பரஸ்பரம் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர்.
இதையறியாத பெண்ணின் குடும்பத்தினர், ஷிவமொகாவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன், மகளுக்கு திருமணம் நிச்சயித்தனர். பெற்றோருக்கு பயந்து அப்பெண், தன் காதலை மூடி மறைத்து திருமணத்துக்கு சம்மதித்தார். பேலுாரின் ஒக்கலிகர் பவனில், நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகூர்த்த நேரத்தில், மணமகன் தாலி கட்டும் போது, திடீரென அங்கு வந்த நவீன், தாலியை பறித்துக் கொண்டார்.
'மணப்பெண் என்னை தான் காதலிக்கிறாள். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்' என பிடிவாதம் பிடித்தார். இதனால், திருமண மண்டபத்தில் சிறிது நேரம் குழப்பமான சூழ்நிலை உருவானது.
தகவலறிந்து அங்கு வந்த பேலுார் போலீசார், நவீனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மணமகளின் காதல் விவகாரம் தெரிந்ததால், மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மனம் வெறுத்த மணமகன் பிரமோத்குமார், 'இந்த திருமணமே தேவையில்லை' என, கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது சம்பந்தமாக காதலன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

