ADDED : மே 03, 2024 06:53 AM
தேவனஹள்ளி: தரையிறங்க இருந்த நிலையில், விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற, இன்ஜினியரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
கோல்கட்டாவில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 28ம் தேதி, 'இண்டிகோ' விமானம் வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில், விமானத்தில் பயணித்த ஒரு வாலிபர், அவசர கால கதவை திறக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். விமான பணிப்பெண் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
விமானம் தரையிறங்கியதும் அந்த வாலிபர், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர், மேற்கு வங்க மாநிலம் பங்குராவை சேர்ந்த கவுசிக் கரண், 22 என்பதும், பெங்களூரில் தனியார் கல்லுாரியில், இன்ஜினியரிங் படித்து வருவதும் தெரிந்தது.
முதல் முறை விமானத்தில் பயணம் செய்ததும் தெரிந்தது. அவசர கதவு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். இருக்கையில் இருந்து எழுந்து நிற்க, அவசர கதவின் கைப்பிடியை பிடித்தேன் என்று, கவுசிக் கரண் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து அவருக்கு போலீஸ் நிலைய ஜாமின் கிடைத்தது. போலீசார் எச்சரித்து அனுப்பினர்.