சாப்பாடு தீர்ந்ததால் அடிதடி கைகலப்பால் நின்ற திருமணம்
சாப்பாடு தீர்ந்ததால் அடிதடி கைகலப்பால் நின்ற திருமணம்
ADDED : ஜூலை 14, 2024 12:11 AM

பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் சாப்பாடு தீர்ந்ததன் காரணமாக மணமகன் - மணமகள் குடும்பத்தினரிடையே வெடித்த தகராறு கைகலப்பில் முடிந்ததை அடுத்து திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாதைச் சேர்ந்த மணமக்களுக்கு சமீபத்தில் திருமணத்துக்கு முந்தைய வரவற்பு நிகழ்ச்சி நடந்தது.
கைகலப்பு
மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
ஒருபுறம் மேளதாளம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்த உற்சாகக் கொண்டாட்டம், மறுபக்கம் விதவிதமான வகைகளுடனான உணவுடன் களைகட்டியது.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இந்த காட்சிகள் அனைத்தும் தலைகீழாக மாறின.
திருமணத்தில் சாப்பாடு தீர்ந்ததால் ஏற்பட்டதை அடுத்து, மணமகன் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து மணமகள் வீட்டாரிடம், அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உணவு பற்றாக்குறைக்கு மணமகள் குடும்பத்தினர் தேவையான பணம் கொடுத்த போதிலும், மணமகன் தரப்பில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. திருமண மண்டபத்தில் இருந்த நாற்காலிகளை இரு தரப்பினரும் எடுத்து வீசினர்.
மரக்கட்டை உட்பட கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து தாக்கிக் கொண்டனர். இதனால், திருமண நிகழ்வு ரணகளமாக மாறியது. இரு தரப்பினரைச் சேர்ந்த பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, மணமகன் - மணமகள் குடும்பத்தினர் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அற்ப காரணங்கள்
சமீபத்தில் உத்தர பிரதேசம் ரேபரேலியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அசைவ உணவில் 'லெக் பீஸ்' இல்லாதது குறித்து எழுப்பப்பட்ட புகார், கைகலப்பில் முடிந்தது.
திருமண கொண்டாட்டம் என்பது இரு குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அற்பக் காரணங்களால் அவை, வன்முறை களமாக மாறி வருவது கவலையை ஏற்படுத்துவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.