சிவகுமார் மீதான வழக்கு வாபஸ் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை
சிவகுமார் மீதான வழக்கு வாபஸ் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை
ADDED : ஏப் 05, 2024 11:20 PM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது, கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணையை துவக்கி உள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு முந்தைய பா.ஜ., அரசு அனுமதி அளித்தது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற பிறகு, சி.பி.ஐ., விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது. லோக் ஆயுக்தா விசாரிக்கவும் உத்தரவிட்டது.
அரசின் முடிவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சார்பிலும் பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று துவங்கியது. நீதிபதிகள் சோமசேகர், உமேஷ் அடிகா விசாரித்தனர்.
சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார் வாதாடுகையில், ''சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., 2020 மார்ச் முதல் விசாரித்து வருகிறது. விசாரணை இன்னும் நடக்கிறது. அதற்குள் சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுத்த அனுமதியை, கர்நாடக அரசு திரும்பப் பெற்றது சட்டவிரோதமானது,'' என்றார்.
மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல், 'சிவகுமார் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த, முந்தைய பா.ஜ., அரசு அனுமதி அளித்தபோது, விதிகளை பின்பற்றவில்லை. சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு அளித்த அனுமதி திரும்பப் பெறப்பட்டது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

