வயநாடு பாதிப்பு பகுதிகளில் மனமுடைந்து அழுத அமைச்சர்
வயநாடு பாதிப்பு பகுதிகளில் மனமுடைந்து அழுத அமைச்சர்
ADDED : ஆக 12, 2024 03:59 AM

வயநாடு : கேரளாவின் வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் வீடு, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சசீந்திரன் திடீரென மனமுடைந்து அழுதார்.
கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 130 பேரை காணவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் அங்கு, மாநில வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வீடுகள், உறவினர்களை இழந்து வாடும் அப்பகுதி மக்களை தேற்ற முடியாமல் அவர் மனம் உடைந்து அழுதார்.
பின் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய அவர், “இப்படி ஒரு காட்சியை பார்ப்பேன் என வாழ்நாளில் நினைத்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
''அவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அவர்களின் வாழ்க்கையை கட்டமைக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சொந்தங்களை இழந்த அவர்களுக்கு மிக கடினமான நேரத்தில் கேரள அரசு முழு உதவியாக இருக்கும் என உறுதி கூறுகிறேன்,” என்றார்.

