ஷத்ரியர்கள் எதிர்ப்பை மீறி அமைச்சர் இன்று மனு தாக்கல்
ஷத்ரியர்கள் எதிர்ப்பை மீறி அமைச்சர் இன்று மனு தாக்கல்
ADDED : ஏப் 16, 2024 02:18 AM

ஷத்ரியர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி வேட்பாளரை மாற்றுவதற்கு பா.ஜ., தயாராக இல்லை. சர்ச்சை கருத்து தெரிவித்து சிக்கிய மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா, இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில், அனைத்து தொகுதி களிலும் பா.ஜ.,வே வென்றது.
ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலாவை, ராஜ்கோட் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ஷத்ரியர் எனப்படும் ராஜ்புத்ரர்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரூபலா தெரிவித்தார்.
இதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூபலா மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஷத்ரியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இதை ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சில பிரிவினர் இந்த மன்னிப்பை ஏற்கவில்லை; வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், பா.ஜ., தலைமை இதற்கு மசியவில்லை. வேட்பாளரை மாற்றுவதற்கு பா.ஜ., தயாராக இல்லை. இதற்கிடையே, ரூபலாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவ்வளவு பரபரப்புகளுக்கு இடையே, அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மோடி, தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு விரைவில் பிரசாரத்துக்கு வரவுள்ளார். வரும், 22ம் தேதி ராஜ்கோட்டில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். அப்போது, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அவருடைய பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படிதார் எனப்படும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர் பர்ஷோத்தம் ரூபலா. அவருக்கு எதிராக, அதே சமூகத்தைச் சேர்ந்த பரேஷ் தமானியை காங்கிரஸ் நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தொகுதியில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர்.
மேலும், குஜராத் மக்கள், பிரதமர் மோடிக்காகவே ஓட்டளித்து வருகின்றனர். அதனால், ஷத்ரியர் எதிர்ப்பு இருந்தாலும், ரூபலா வெற்றியில் எந்த பாதிப்பும் இருக்காது என, பா.ஜ., நம்புகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

