எம்.எல்.ஏ., வருகைக்கு காத்திருந்த அமைச்சர் ராஜமலையில் பொழுதை கழித்தார்
எம்.எல்.ஏ., வருகைக்கு காத்திருந்த அமைச்சர் ராஜமலையில் பொழுதை கழித்தார்
ADDED : செப் 14, 2024 11:15 PM
மூணாறு,:எம்.எல்.ஏ., வருகைக்கு வெகு நேரம் காத்திருந்த வனத்துறை அமைச்சர், அந்த நேரத்தை ராஜமலையில் செலவழித்து ரசித்தார்.
மூணாறு வன உயிரின பிரிவுக்கு கீழ் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று முன்தினம் வந்தார்.
இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவுப் பகுதியான 5ம் மைல் பகுதியில் தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா தலைமையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விழா காலை 10:00 மணிக்கு துவங்குவதாக இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அமைச்சர் வந்துவிட்டார். பல்வேறு காரணங்களால் எம்.எல்.ஏ., வருவதற்கு தாமதமாகும் எனத் தெரிய வந்தது. அதனை அறிந்த அமைச்சர் எவ்வித 'டென்ஷனும்' இன்றி, எம்.எல்.ஏ., வரும்வரை பொழுதைக் கழிக்க எண்ணினார்.
வனத்துறை சார்பில் 5ம் மைலில் உள்ள ஓட்டல், ஆன்லைன் டிக்கெட் மையம், மலைவாழ் மக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். வடமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்திருந்த பயணிகளிடம் பேசி மகிழ்ந்தார்.
அதிநவீன தொழில்நுட்பத்தில் 360 டிகிரி 3டி முறையில் அமைக்கப்பட்டுள்ள 'ரியாலிட்டி மைய'த்தில் இரவிகுளம் தேசிய பூங்காவை கண்டு மகிழ்ந்தார்.
அதன்பின்பு ராஜமலைக்குச் சென்ற அமைச்சர் வெகுநேரம் செலவழித்து செல்பி பாய்ன்ட், வரையாடு, நீர்வீழ்ச்சியையும் ரசித்தார். திரும்பும் வழியில் எம்.எல்.ஏ., ராஜா அமைச்சரை சந்தித்தார். இரண்டு மணி நேரம் தாமதமாக விழா துவங்கியது.