ADDED : நவ 07, 2024 12:44 AM

காவிரி ஆற்றில் இருந்து உருவான துபாரே, மிகவும் சிறப்பான தீவு பகுதியாகும். சுற்றிலும் பாயும் ஆற்றுக்கு நடுவே தீவு, இப்போது வளர்ப்பு யானைகளின் முகாமாக உள்ளது. சுற்றுலா பயணியர் அடிக்கடி செல்லும் இடம் இதுவாகும்.
குடகில் உள்ள சுற்றுலா தலங்களில் மாறுபட்ட இடம் துபாரே. இயற்கை அழகி நாட்டியமாடுகிறாள். சுற்றிலும் சலசலவென பாயும் காவிரி ஆறு, நீரை கிழித்து கொண்டு செல்லும் இயந்திர படகுகள், ஆற்றங்கரை நெடுகிலும் வேர் பரப்பி, ஓங்கி வளர்ந்த மரங்கள். இவற்றில் அடைக்கலம் பெற்ற பறவைகளின் இன்னிசை ரீங்காரம், பிளறியபடி நீரில் ஆனந்தமாக விளையாடும் வளர்ப்பு யானைகள், சுற்றுலா பயணியருக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.
வார இறுதி
ஓய்வில்லாத பணி, எப்போதும் வாகனங்கள் சத்தம், குடும்பத்தின் பிடுங்கல், பிடுங்கலால் அவதிப்படுவோர், அமைதியான சூழ்நிலையில், நிம்மதியாக பொழுது போக்க, இறைவன் உருவாக்கிய இடம் துபாரே என்றால் மிகை ஆகாது. வார இறுதியில் இந்த இடம் சுற்றுலா பயணியரால் நிரம்பி இருக்கும்.
துபாரேவுக்கு வரும் சுற்றுலா பயணியர் காவிரி ஆற்றில் விளையாடவும், வளர்ப்பு யானைகளின் தினசரி சேட்டைகளை நேரில் பார்க்க விரும்புகின்றனர். இங்கு யானைகளுடன் விளையாடலாம். குட்டி யானைகளின் குறும்புத்தனங்களை ரசிக்கலாம்.
துபாரேவில் காவிரியை, இரண்டு விதமாக காணலாம். மழைக்காலத்தில் பெரும் சத்தத்துடன் ஆக்ரோஷமாக காட்டாற்று வெள்ளமாய் பாயும் காவிரி, அதன்பின் வரும் நாட்களில் அமைதியாக பாயும்.
ஆற்றுக்குள் மறைந்து கிடக்கும் கற்பாறைகள், கோடை காலத்தில், வெளியே தலை நீட்டும். பாறைகள் மீது கால் வைத்து, ஆற்றை கடப்பது, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
பெருமளவு
இதற்கு முன் மழைக்காலத்தில் சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவதில்லை. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் இருக்கும் என்ற பயத்தால், வர தயங்குவர். ஆனால் சமீப ஆண்டுகளில், மழைக்காலத்தில் சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிகின்றனர்.
ஒரு காலத்தில் துபாரே, காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் யானைகளை பிடித்து, பழக்கும் இடமாக இருந்தது. மரக்கட்டைகளை சுமந்து செல்ல பயன்படுத்தப்பட்டன. கடினமான வேலைகளுக்கு யானைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், வளர்ப்பு யானைகளின் முகாமாக மாறியது. காட்டு யானைகளை விரட்டவும், புலி, சிறுத்தைகளை பிடிக்கவும் வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
12,000 ஏக்கர்
துபாரே வனப்பகுதி, 12,757 ஏக்கரில் அமைந்துள்ளது. காலங்காலமாக மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வனத்தில் சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான், மயில் என, பலவிதமான பிராணி, பறவைகள் உள்ளன.
துபாரே முகாமுக்கு, படகில் காவிரி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இங்கு தொங்கு பாலம் கட்டும்படி, சுற்றுலா பயணியர் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
- நமது நிருபர் -