ADDED : மே 19, 2024 12:43 AM

புதுடில்லி: பிரபல ஹிந்தி டிவி தொடரில் நடித்து வந்த குருசரண் சிங், கடந்த மாதம் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், ஒரு மாதத்துக்கு பின் நேற்று வீடு திரும்பினார்.
டில்லியில் வசித்து வருபவர் நடிகர் குருசரண் சிங், 50. இவர் 'தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா' என்ற பிரபல ஹிந்தி டிவி தொடரில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்., 22ல் இவர் வீட்டிலிருந்து மாயமானார்.
மும்பை புறப்படுவதாக கூறிவிட்டு சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
குருசரண் சிங் காணாமல் போன தினத்தன்று மும்பைக்கு செல்ல இரவு 8:30 மணிக்கு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார்.
ஆனால், இரவு 9:15 மணிக்கு, டில்லி பாலம் பகுதியில், அவர் சாலையை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
இதை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். அவருக்கு பொருளாதார பிரச்னைகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.
இந்நிலையில் நேற்று அவரே வீடு திரும்பினார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போனதால் ஆன்மிக சுற்றுலாவாக பல்வேறு குருத்வராக்களுக்கு சென்று தங்கியிருந்ததாகவும், பின் வீடு திரும்ப முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

