இன்று நடக்கும் உ.பி., தேர்தலில் களம் காணும் முலாயம் குடும்பத்தினர்
இன்று நடக்கும் உ.பி., தேர்தலில் களம் காணும் முலாயம் குடும்பத்தினர்
ADDED : மே 07, 2024 05:17 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தின், 10 லோக்சபா தொகுதி களுக்கு இன்று நடக்கும் தேர்தலில், சமாஜ்வாதி நிறுவனர் மறைந்த முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினர், அதிக அளவில் களம் காண்கின்றனர்.
உ.பி.,யில் உள்ள சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, பிரோஸாபாத், மெயின்புரி, எட்டாவா, புடான், ஆன்லா, பெரேய்லி உள்ளிட்ட 10 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. போட்டியிடும் 100 வேட்பாளர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க 1.88 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தேர்தலில், சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினர், பல்வேறு தொகுதிகளில் களம் காண்கின்றனர். எனவே, மக்களின் பார்வை யாதவ் குடும்பத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
முலாயம் சிங் மறைந்த பின், அவரது தொகுதியான மெயின்புரியில் நடந்த இடைத் தேர்தலில் அவரது மருமகளும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வென்றார். தற்போது மீண்டும் அந்த தொகுதி யை கைப்பற்ற அவர் களம் இறங்கியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய முதன்மை பொதுச்செயலரும், முலாயமின் நெருங்கிய உறவினருமான ராம்கோபால் யாதவின் மகன் அக் ஷய் யாதவ், பிரோஸாபாதில் போட்டியிடுகிறார். கடந்த 2014ல் இதே தொகுதியில் இவர் வெற்றி பெற்றதால், இந்த முறை தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சியில் உள்ளார்.
முலாயமின் இளைய சகோதரர் ஷிவ்பால் யாதவின் மகன் ஆதித்யா யாதவ், புடான் தொகுதியில் தன் அரசியல் வாழ் வை துவக்குகிறார்.
யாதவ் குடும்பத்தினரை தவிர மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், உ.பி.,யின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங், மாநில வருவாய்த்துறை இணையமைச்சர் அனுாப் பிரதான் பால்மிகி ஆகியோரும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.
உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், எட்டாவா தொகுதியில், 'ஹாட்ரிக்' வெற்றிக்கான தீவிர முயற்சியில் உள்ளார்.