ADDED : மார் 22, 2024 05:57 AM
மாண்டியா: பெண்ணையும், அவரது பேத்தியையும் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு, கடூரின் கல்கெரே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா, 46. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது மகன் பிரவீன். இவருக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
மாண்டியா, நாகமங்களாவின் ஆதிசுஞ்சனகிரியில் ஒருவருக்கு, ஜெயம்மா கடன் கொடுத்திருந்தார். இதை வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, பேத்தி ரிஷிகாவை அழைத்துக் கொண்டு, மார்ச் 12ல் புறப்பட்டு சென்றார்.
அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' ஆகிஉள்ளது.
பிரவீன், தாயையும், மகளையும் காணாமல் பரிதவித்தார். பல இடங்களில் தேடினார். எந்த தகவலும் தெரியாததால், அஜ்ஜம்புரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர், ஜெயம்மாவின் மகன் பிரவீனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உன் தாயையும், மகளையும் கொலை செய்து, உடல்களை துண்டு, துண்டாக வெட்டி கோணிப்பையில் போட்டு, ஆதிசுஞ்சனகிரி அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளோம்' என கூறிவிட்டு தொடர்பை சட்டென துண்டித்து விட்டார்.
அதிர்ச்சியடைந்த பிரவீன், இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் ஏரிக்கு சென்று தேடிய போது, கோணி பையில் பாட்டி, பேத்தியின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
'ஜெயம்மாவிடம் கடன் பெற்றவரே, இவரையும், பேத்தியையும் கொலை செய்திருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

