கேரள தலைவரின் ஆபாச பேச்சு; துவங்கியது அரசியல் யுத்தம்
கேரள தலைவரின் ஆபாச பேச்சு; துவங்கியது அரசியல் யுத்தம்
ADDED : மே 13, 2024 12:38 AM

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். ஹரிஹரன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சைலஷா மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் குறித்து ஆபாச கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளது புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சைலஜா குறித்த திருத்தப்பட்ட வீடியோவை, ஐக்கிய ஜனநாயக முன்னணி வெளியிட்டதாக ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கராவில் நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடந்தது. இதில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற புரட்சிகர மார்க்சிஸ்ட கட்சியின் மூத்த தலைவர் ஹரிஹரன், சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துகளை தெரிவித்தார்.
இது, கேரளாவில் அரசியல் யுத்தத்தை துவக்கியுள்ளது. இரு கூட்டணியில் உள்ள கட்சிகளும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றன.
அவர் வாய் தவறி பேசியதாகவும், அது தனிப்பட்ட கருத்து என்றும் அவருடைய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஆனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிராக புகார் கூறியுள்ளன.
இதற்கிடையே, தன் கருத்துக்கு ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.