ஒலிம்பிக் தங்கம் நழுவி।யது ஏமாற்றமே; ஆனால் விளையாட்டில் இது சகஜம்! தெம்பு காட்டுகிறார் வினேஷ் போகத்
ஒலிம்பிக் தங்கம் நழுவி।யது ஏமாற்றமே; ஆனால் விளையாட்டில் இது சகஜம்! தெம்பு காட்டுகிறார் வினேஷ் போகத்
ADDED : ஆக 08, 2024 01:19 AM

பாரிஸ்லிம்பிக் மல்யுத்த பைனலில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது, நாடு முழுதும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது. ''ஏமாற்றம் தான். ஆனால், விளையாட்டில் இதெல்லாம் சகஜம்,'' என்று தெம்பும், நம்பிக்கையுமாக கூறுகிறார் வினேஷ் போகத்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. துப்பாக்கி சுடுதலில் மனுபாகர் உள்ளிட்டோர் அசத்த, இந்தியாவுக்கு மூன்று வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
அடுத்து மல்யுத்த போட்டியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, பங்கேற்றார். முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
ஒலிம்பிக்கில் முதல் சுற்று போட்டி, பைனல் நடக்கும் காலை என இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்படும். நேற்று பைனல் நடக்க இருந்த நிலையில், வினேஷ் போகத்தின் எடை சோதிக்கப்பட்டது. அப்போது 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சர்வதேச மல்யுத்த விதிப்படி எடை கூடுதலாக இருப்பவர் கடைசி இடத்துக்கு தள்ளப்படுவர். இதனால், வினேஷின் பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது. 140 கோடி இந்திய மக்களின் நெஞ்சமும் தகர்ந்தது.
வினேஷ் போகத் 56 - 57 கிலோ எடை இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த ஏழு மாதங்கள் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு 50 கிலோவாக எடையை குறைத்தார்.
பைனலுக்கு முதல் நாள் இரவில் வினேஷின் எடை திடீரென 1 கிலோ கூடியுள்ளது. இரவு முழுதும் சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஜாகிங் என பல்வேறு பயிற்சி மேற்கொண்டு உள்ளார். ஆனாலும், 900 கிராம் எடை தான் குறைக்க
தொடர்ச்சி 3ம் பக்கம்
ஒலிம்பிக் தங்கம்...
முதல் பக்கத் தொடர்ச்சி
முடிந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவைவிட, 100 கிராம் அதிகம் இருந்ததால், வேதனையுடன் நாடு திரும்ப உள்ளார். உள்ளூர் மல்யுத்த தொடர்களில் 2 கிலோ எடை வரை கூடுதலாக இருக்க ஒருங்கிணைந்த உலக மல்யுத்த அமைப்பு அனுமதி அளிக்கிறது. ஆனால், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் எவ்வித சலுகையும் கிடையாது.
பாரிசில் உள்ள இந்திய பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், ''காலையில் எடை பார்த்த போது வினேஷ் போகத் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது. இதற்கு விதிமுறை அனுமதி அளிக்காது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்,'' என்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்ட செய்தியில், 'வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இவரது எடையை குறைக்க இரவு முழுவதும் நிபுணர்கள் முயற்சித்தனர். இருப்பினும் சில கிராம் எடை அதிகமாக இருந்தார். வினேஷ் போகத்தின் தனியுரிமையை மதிப்போம். எஞ்சியுள்ள போட்டிகளில் கவனம் செலுத்துவோம்' என தெரிவித்துள்ளது.
பி.டி.உஷா ஆறுதல்
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறுகையில், ''நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஒலிம்பிக் கிராம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்தை சந்தித்து ஆறுதல் கூறினேன். இவரது தகுதி நீக்கம் அதிர்ச்சி அளிக்கிறது. இவருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய அரசு, ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஆதரவாக இருக்கும். தகுதி நீக்கத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த உலக மல்யுத்த அமைப்பிடம் அப்பீல் செய்துள்ளோம்,'' என்றார்.
நலமாக உள்ளார்
--------பாரிஸ் ஒலிம்பிக் இந்திய குழுவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பர்திவாலா கூறியதாவது:
மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த எடையை குறைத்து போட்டிகளில் வீராங்கனைகள் பங்கேற்பர். சாப்பிடும் உணவை குறைப்பதால், பலவீனமடைவர். இதை ஈடு செய்ய சத்தான உணவு கொடுக்கப்படும். வினேஷின் ஊட்டச்சத்து நிபுணர், அவருக்கு நாள் ஒன்றுக்கு 1.5 கிலோ சத்தான உணவு கொடுக்க திட்டமிட்டார்.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்ற பின், வினேஷ் எடை சற்று அதிகரித்தது. இதை குறைக்க இவரது தலைமுடியை குறைத்தல், உடை அளவை குறைத்தது என பல முயற்சிகள் செய்தோம். எதுவும் பலன் அளிக்கவில்லை. மருத்துவமனையில் வினேஷிற்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது நலமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
'இந்தியாவின் பெருமை நீங்கள்!'
நம் வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். இந்தியாவின் பெருமை நீங்கள். மேலும், ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் இன்ஸ்பிரேஷன். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது.
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. எனவே, வலுவாக திரும்பி வாருங்கள். உங்களுக்கு நாங்கள் எல்லாரும் உறுதுணையாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இது தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோடி, வினேஷ் போகத்துக்கு தேவையான உதவிகளை செய்யும்படியும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்யும்படியும் அறிவுறுத்தினார்.
மக்களின் சாம்பியன்!
ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் சிலிர்க்க வைத்ததுடன், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் ஏமாற்றமாக இருந்தாலும், அவர் 140 கோடி மக்களின் இதயங்களில் சாம்பியனாக நிலைத்திருப்பார்.
திரவுபதி முர்மு
ஜனாதிபதி