ஆற்றில் விழுந்த லாரியை மீட்க மறுப்பு உரிமையாளர் தற்கொலை முயற்சி
ஆற்றில் விழுந்த லாரியை மீட்க மறுப்பு உரிமையாளர் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 15, 2024 03:57 AM
உத்தர கன்னடா, : உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில், காளி ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த பழைய பாலம், இம்மாதம் 7ம் தேதி அதிகாலை மூன்று பகுதியாக இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் வந்து கொண்டிருந்த தமிழக லாரி, ஆற்றில் விழுந்தது.
இதை பார்த்த, புதிய பாலத்தில் வந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கும், அருகில் இருந்த மீனவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள், லாரியுடன் ஆற்றில் விழுந்த லாரி ஓட்டுனர் பாலமுருகன், 37, லாரி கண்ணாடியை உடைத்து வெளியே வந்து, லாரியின் மீது ஏறிக் கொண்டார். மீனவர்களும் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், லாரியின் உரிமையாளரான செந்தில்குமார், ஆற்றில் விழுந்த லாரியை மீட்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கூறி உள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வேதனை அடைந்த அவர், 'ஆற்றில் விழுந்த லாரியை, ஏழு நாட்களாகியும் மீட்கவில்லை. என் லாரி ஆற்றில் விழுந்ததால், பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்கள் தப்பின. ஆனால், தமிழக லாரி என்பதால், எனது லாரியை மீட்காமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கிறது' என்றார்.
நேற்று முன்தினம் இரவு லாரி உரிமையாளரும், அவரது நண்பரும், பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்க முற்பட்டனர். அங்கிருந்த போலீசாரும், மற்றவர்களும் அவர்களை தடுத்தனர்.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கூறுகையில், ''ஆற்றில் விழுந்த லாரியை மீட்கும்படி, பாலத்தை நிர்வகிக்கும் ஐ.ஆர்.பி., நிறுவனத்துக்கு, இந்திய தேசிய சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், லாரியை மீட்பது சிரமம். நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. எனவே லாரிக்கான காப்பீட்டு தொகையும், நிவாரணமும் வழங்கப்படும்,'' என்றார்.