வெளியூரில் மைசூரு வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் மும்முரம்
வெளியூரில் மைசூரு வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் மும்முரம்
ADDED : ஏப் 24, 2024 07:14 AM
மைசூரு: பல்வேறு காரணங்களுக்காக, வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களை மைசூருக்கு அழைத்து வர, அந்தந்த கட்சித் தலைவர்கள் படாத பாடுபடுகின்றனர்.
மைசூரு லோக்சபா தொகுதி, கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு மிகுந்த தொகுதிகளில் ஒன்று. மைசூரின் கிராமப்புறங்களை சேர்ந்த வாக்காளர்கள் பலரும், கல்வி, வேலை, தொழில் என, பல்வேறு காரணங்களால் நகர்ப்பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, இவர்களை அவரவர் சொந்த ஊருக்கு வரவழைக்க, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். வேறு ஊருக்குச் சென்றவர்களை அவர்களின் குடும்பத்தினர் மூலமாக, ஓட்டு போட அழைத்து வர தயாராகின்றனர்.
வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, அந்தந்த கிராமங்களுக்கு தகவல் சேகரிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொண்டு, தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்.
'ஓட்டுப் பதிவு நாளன்று ஊருக்கு வாருங்கள். வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவை, நாங்களே ஏற்கிறோம்' என, அவர்கள் கூறுகின்றனர்.
சில தொண்டர்கள், தாங்களே வாகன வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். முன்கூட்டியே செலவுக்கான பணத்தை கொடுக்கின்றனர். வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களுக்கு திடீர் மவுசு அதிகரித்துள்ளது.
***

