ADDED : மே 06, 2024 05:04 AM
லோக்சபா முடிந்த பின், அரசியல் கட்சிகள் நிம்மதி பெருமூச்சு விட முடியாது. ஏனென்றால் மேலவை தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் என, ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நிற்கின்றன.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 26ல் நடந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது என, அரசியல் தலைவர்கள் ஓய்ந்து அமர முடியாது. பல தேர்தல்கள் காத்திருக்கின்றன. இதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.
தயாராவது முக்கியம்
லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும். மத்தியில் புதிய அரசு அமைந்த கையோடு, மேலவை தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதுடன், நின்று விட முடியாது. மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சியில் அமர்வதும் அதே அளவுக்கு முக்கியம்.
உள்ளூர் தலைவர்களை வளர்க்க, இந்த தேர்தல் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த.,வுக்கு மிகவும் அவசியம். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகள், பெங்களூரு மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன.
கர்நாடகாவின் 30 மாவட்ட பஞ்சாயத்துக்களின் பதவி காலம், 2021 மே மாதம் முடிந்தது. மூன்று ஆண்டாக மக்கள் பிரதிநிதிகளை பார்க்கவில்லை. தொகுதி இட ஒதுக்கீடு விஷயத்தில், பலருக்கும் ஆட்சேபம் உள்ளது.
அதிகாரிகளின் தர்பார்
பெங்களூரு மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காலம், 2020 செப்டம்பர் 10ல் முடிவடைந்தது. அன்றைய பா.ஜ., அரசு கொரோனாவை காரணம் காண்பித்து, தேர்தலை தள்ளி வைத்தது. மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தது.
தேர்தல் நடத்த வேண்டும் என்பதையே, அரசு மறந்துவிட்டது. தற்போது, 'அதிகாரிகளின் தர்பார்' நடக்கிறது. வார்டுகளுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, தேர்தலை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2023ன் டிசம்பருக்குள் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் அரசு, லோக்சபா தேர்தலுக்கு தயாரானதால், மாநகராட்சி தேர்தலை கிடப்பில் போட்டது. 135 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள காங்கிரஸ் அரசு, இனியும் ஏதோ காரணங்களை கூறி, தேர்தல்களை தள்ளி வைக்க முடியாது.
அப்படி தள்ளி வைத்தால், அரசியல் சாசனம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் நடத்தும் காங்கிரஸ் அரசு, தானே விதிமுறைகளை மீறியதாக அவப்பெயரை சுமக்க நேரிடும்.
சட்டசபை தேர்தலில் தோற்ற பா.ஜ.,வுக்கு, தன் வேரை பலப்படுத்த மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் மிகவும் அவசியம்.
இந்த தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது. சொந்த திறமையை காண்பிக்க வேண்டும். இதற்கிடையே மேலவை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தல்கள் காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு இமேஜ் பிரச்னையாகும். எனவே லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், அடுத்த அக்னி பரீட்சைக்கு, தயாராக வேண்டும்.
- நமது நிருபர் -