பெண் டாக்டரின் முடியை பிடித்து தாக்கிய நோயாளியால் பரபரப்பு
பெண் டாக்டரின் முடியை பிடித்து தாக்கிய நோயாளியால் பரபரப்பு
UPDATED : ஆக 28, 2024 06:50 AM
ADDED : ஆக 28, 2024 01:03 AM

திருப்பதி : திருப்பதி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டரின் முடியை பிடித்து இழுத்து நோயாளி தாக்கியதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த பங்காருராஜா என்ற நபர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் திடீரென, பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கினார். அதில் டாக்டருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த மற்ற டாக்டர்கள், அவரச சிகிச்சை வார்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கூறினர். அவர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி கவுதமி பேச்சு நடத்தி, பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்தார். அதன் பின் அனைவரும் பணிக்கு திரும்பினர்.
தாக்குதல் சம்பவம் குறித்து மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர் குமார் கூறியதாவது: திருப்பதி கோவிலுக்கு வந்த பங்காருராஜா என்ற பக்தருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு மனநல பிரச்னை இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் நினைவு திரும்பிய அவர், வெளியே அனுப்பும்படி பயிற்சி டாக்டரிடம் கேட்டுள்ளார். அதற்கு பயிற்சி டாக்டர் மறுத்ததால் அவரை தாக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.