தமிழ் கலெக்டர் முல்லை முகிலனுக்கு மங்களூரு மக்கள் பாராட்டு மழை
தமிழ் கலெக்டர் முல்லை முகிலனுக்கு மங்களூரு மக்கள் பாராட்டு மழை
ADDED : ஆக 02, 2024 10:14 PM

மங்களூரு : 'தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தட்சிண கன்னடா கலெக்டர் முல்லை முகிலன் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். மிகவும் நல்ல அதிகாரி. எந்த காரணத்துக்கும் அவரை இடமாற்றம் செய்ய கூடாது' என்று சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம், அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டனர்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் முல்லை முகிலன். இவர், 2013ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். கடந்தாண்டு ஜூன் 17ம் தேதி முதல், கர்நாடகாவின் தட்சிண கன்னடா கலெக்டராக பணிபுரிகிறார்.
பொது மக்களுடன் மிகவும் நெருக்கமாகி பழகி, அவர்களின் பிரச்னைகளை விரைவாக தீர்த்து வருகிறார். இதனாலேயே அப்பகுதி மக்கள், அவர் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், மழை பாதித்த மங்களூரின் அத்யபாடி பகுதியில், சுகாதார துறை அமைச்சரும், தட்சிண கன்னடா பொறுப்பு அமைச்சருமான தினேஷ் குண்டுராவ், நேற்று ஆய்வு செய்தார்.
அவருக்கு, கலெக்டர் முல்லை முகிலன், பாதிப்பு குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் விளக்கினார்.
இந்த வேளையில், 'கலெக்டர் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். எங்களுக்கு பிரச்னை என்றால், ஓடி வந்து தீர்த்து வைக்கிறார்.
எந்த காரணத்துக்கும் அவரை இடமாற்றம் செய்ய கூடாது. மிகவும் நல்ல அதிகாரி. எங்கள் வலியை கேட்கும் தாழ்மை அவரிடம் உள்ளது' என்று அப்பகுதியினர் பாராட்டு மழை பொழிந்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ''முல்லை முகிலன் மிகவும் சிறந்த அதிகாரி. சிறப்பாக பணியாற்றுகின்றார். விரைவில் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்,'' என்றார்.
அப்போது, 'அவரை இடமாற்றம் செய்யாமல் இருங்கள், அது போதும்' என்று மக்கள் கூறினர். மக்களின் அன்புக்கு, கலெக்டர் நெகிழ்ச்சி அடைந்தார்.