வீட்டை சுற்றி வளைத்த மக்கள் : போலீசை அழைத்த திருடர்கள்
வீட்டை சுற்றி வளைத்த மக்கள் : போலீசை அழைத்த திருடர்கள்
ADDED : செப் 02, 2024 01:11 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், திருட வந்த வீட்டை பொது மக்கள் சுற்றி வளைத்ததை அடுத்து, அச்சமடைந்த திருடர்கள், உதவிக்கு போலீசை அழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள கோலாயத் என்ற பகுதியில், மதன் பரீக் என்பவரது வீடு உள்ளது. இவர், அருகே உள்ள தன் சகோதரர் வீட்டுக்கு சமீபத்தில் சென்றார்.
இந்நிலையில், ஆக., 29ம் தேதி அதிகாலை 2:00 மணி அளவில், மதன் பரீக் வீட்டில் கொள்ளை அடிக்க இருவர் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த மதன் பரீக், வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டின் கதவு மற்றும் கேட்டை பூட்டிய அவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
வீட்டை பொது மக்கள் சுற்றி வளைத்ததை பார்த்த திருடர்கள், ஜன்னலை உடைத்து தப்பிக்க முயன்றனர்; ஆனால் முடியவில்லை. வெளியே சென்றால் மக்கள் அடித்து உதைத்து விடுவர் என பயந்த திருடர்கள், வேறு வழியின்றி, மொபைல் போனில் போலீசாரை அழைத்து உதவி கேட்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், வீட்டை விட்டு திருடர்கள் வெளியே வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திரராஜ், பஞ்சாபைச் சேர்ந்த சஜ்ஜன் குமார் என்பது தெரியவந்தது.