'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்
'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்
ADDED : ஜூன் 03, 2024 11:15 PM

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த 56 வயதான நபர், வீட்டில் டீ அருந்தியபடி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ நகைச்சுவை காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர், சிரிப்பை அடக்க முடியாமல், வாய்விட்டு சிரித்தார்.
ஒரு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து சிரித்தபடி இருந்தவரின் கைகளில் இருந்த டீ கோப்பை கீழே விழுந்தது. அடுத்த நொடியே அவரது உடல் ஒரு பக்கமாக சாய்ந்து நாற்காலியில் இருந்து கீழே விழுந்து மயக்கமானார்.
இதை பார்த்த அவரது மகள் பதற்றத்துடன் தந்தையை எழுப்பினார். அவரோ சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். உடனே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போதே அந்த நபர் கண் திறந்து பார்த்து, பேச துவங்கினார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை கண்டறிந்தனர்.
ஆனால், அவர் திடீரென சுயநினைவு இழந்தது ஏன் என்பதை ஆராய, அந்த நபரை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமாரிடம் அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர் சுதிர் குமார், அந்த நபர் அதீத சிரிப்பால் மயக்கம் அடைந்ததை கண்டறிந்தார்.
இது பற்றி டாக்டர் சுதிர் கூறியதாவது:
அந்த 56 வயது நபருக்கு எவ்வித மருத்துவ குறைபாடும் இல்லை. நல்ல ஆரோக்கியமாகவே உள்ளார். எதற்காகவும் அவர் மருந்து உட்கொள்பவராகவும் இல்லை. அதீதமான சிரிப்பால் ஏற்படும், 'சின்கோப்' எனப்படும் தற்காலிக நினைவு இழப்பு அவருக்கு ஏற்பட்டுஉள்ளது.
அவருக்கு மருந்துகள் அளிக்கவில்லை. இதய பரிசோதனை மட்டும் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளோம். மற்றபடி அதீதமான சிரிப்பு, நீண்ட நேரம் நிற்பது, கடினமான உடல் உழைப்பு போன்றவற்றை தவிர்க்கும்படி கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.