ADDED : மே 21, 2024 06:21 AM
மைசூரு: டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து, தப்பிக்கும் நோக்கில் மாடியில் இருந்து குதித்தவர் காயம் அடைந்தார்.
மைசூரின் மானசி நகரில் வசிப்பவர் டாக்டர் பாலாஜி. இவரது வீட்டுக்கு தச்சு வேலை செய்ய, ரவி என்பவரை அழைத்து வந்திருந்தார். பெரிய வீடு என்பதால், தச்சு வேலை அதிகம் இருந்தது.
தொலைவில் உள்ள ஊரில் இருந்து, ரவி வந்திருந்தார். தினமும் சென்று வர சிரமப்பட்டார். எனவே இவருக்கு டாக்டரின் குடும்பத்தினர், தங்கள் வீட்டிலேயே தங்கி வேலை செய்ய, வசதி செய்து கொடுத்தனர்.
டாக்டரின் வீட்டில் நிறைய பணம், தங்க நகைகள் இருப்பதை பார்த்து ரவிக்கு, பேராசை ஏற்பட்டது. சிறிது, சிறிதாக பணத்தை திருடினார்; மூன்று முறை சிக்கினார். ஆனால் அவரை டாக்டர் குடும்பத்தினர், போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.
மாறாக 'நீ நன்றாக மர வேலைகளை செய்கிறாய். வாழ்க்கை நடத்த நீ சம்பாதிக்கும் பணமே போதும். திருடுவதை விட்டுவிடு' என புத்திமதி கூறினர். மீண்டும் திருடினால், போலீசில் பிடித்துக் கொடுப்பதாக எச்சரித்தனர்.
அதன்பின், ரவி திருந்தியது போன்று நடித்தார். தன் வேலையை பார்த்துக் கொண்டு, டாக்டர் குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றார். வீட்டின் முன் கதவுக்கு கள்ளச்சாவி தயாரித்துக் கொண்டார்.
நேற்று முன் தினம், டாக்டர் குடும்பத்தினர், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தனர். அப்போது கள்ளச்சாவி போட்டு, பூட்டை திறந்து உள்ளே சென்றார். பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளை எடுக்க துவங்கிய முற்பட்டபோது, வெளியே சென்றிருந்த டாக்டர் பாலாஜி, திடீரென வீட்டுக்கு வந்தார்.
கதவு திறந்து கிடப்பதை கண்டு, திருடன் வந்திருக்கலாம் என நினைத்து, போலீசாருக்கு போன் செய்தார். பீதியடைந்த ரவி, மாடியில் இருந்து பக்கத்து மாடிக்கு தாவிக் குதிக்க முற்பட்டபோது, தவறி கீழே விழுந்தார்.
தலையில் காயமடைந்த அவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் குணமடைந்த பின், விசாரணை நடத்த உள்ளனர். மைசூரு ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

