ADDED : மே 19, 2024 04:00 AM
எலஹங்கா : தனக்கு வேலை போக காரணமானவர் என கருதி, நேபாளி தலையில் கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு, தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் கஜேந்திர சவுத், 32. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் பெங்களூரு வந்தார். எலஹங்கா நியூடவுனில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.
அதே ஹோட்டலில் வேலை செய்யும் சந்தோஷ் என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக மாறினர்.
சில நாட்களுக்கு முன்பு, சந்தோசை, ஹோட்டல் உரிமையாளர் பணியில் இருந்து நீக்கினார். இதற்கு கஜேந்திர சவுத் தான் காரணம் என சந்தோஷ் கோபம் அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு சென்ற சந்தோஷ், அவரை வெளியே அழைத்துச் சென்றார்.
எலஹங்கா நியூடவுன் டெய்ரி சதுக்கம் அருகில் உள்ள மதுக்கடையில், கஜேந்திர சவுத்துக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின், இருவரும் வெளியே வந்தனர். அப்போது கஜேந்திர சவுத்தை கீழே தள்ளி, அங்கிருந்த பெரிய கல்லை, அவர் மீது போட்டு கொலை செய்துவிட்டு, சந்தோஷ் தப்பியோடிவிட்டார்.
அப்பகுதியினர், எலஹங்கா நியூடவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தலைமறைவான சந்தோஷை போலீசார் தேடி வருகின்றனர்.

