ADDED : ஏப் 01, 2024 06:56 AM

ஹெம்மிகேபுரா : பெங்களூரு ஹெம்மிகேபுராவை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 48. இவரது சகோதரர் கோவிந்தராஜு. இவர்கள் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் நிலத்தை சமப்படுத்துவது உட்பட பல பணிகளை செய்கின்றனர்.
ஹெம்மிகேபுராவில் அய்ரா பள்ளி அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டப்பட்டிருந்த மண்ணை, சமப்படுத்தும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி, 40, என்பவர், தனது இரு நண்பர்களுடன் அங்கு வந்தார். மண்ணை சமப்படுத்தும் போது, தண்ணீர் தெளிக்கும்படி உரத்த குரலில் கூறினார்.
அதற்கு லிங்கமூர்த்தி, 'மண்ணை சமன் செய்ய மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் ஊற்ற அல்ல; அந்த பணியை நாங்கள் செய்ய மாட்டோம்' என்றார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த கோவிந்தராஜு, தனது நண்பர்கள் குமார், மஞ்சுவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதற்குள், சிரஞ்சீவி, தான் வைத்திருந்த கத்தியால் லிங்கமூர்த்தியை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த லிங்கமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி லிங்கமூர்த்தி உயிரிழந்தார்.
இச்சம்பவம் வெள்ளிக் கிழமை இரவு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சிரஞ்சீவி உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

