ADDED : ஆக 16, 2024 06:41 AM
ராய்ச்சூர்: திறந்தவெளி கழிப்பிடத்துக்கு சென்ற பெண் மீது, ஜே.சி.பி., இயந்திரம் கட்டட கழிவுகளை கொட்டியதில் அவர் உயிரிழந்தார்.
ராய்ச்சூர் நகரின் ஆஷாபுரா சாலையின், ஜனதா காலனியில் வசித்தவர் தாயம்மா, 32. இப்பகுதியில் ஏழை குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. அருகில் உள்ள திறந்தவெளிக்கு தான் செல்ல வேண்டும்.
தாயம்மா, நேற்று அதிகாலை, அப்பகுதியின் சில பெண்களுடன் சேர்ந்து திறந்தவெளி கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது இடிக்கப்பட்ட வீட்டின் கட்டட கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதற்காக, ஜே.சி.பி., ஓட்டுனர் அங்கு வந்தார். தாயம்மா அமர்ந்திருப்பதை கவனிக்காமல், அவர் மீதே கட்டுமான கழிவுகளை கொட்டினார்.
அவர் அலறியதை ஜே.சி.பி., ஓட்டுனர் கவனிக்கவில்லை. மற்ற பெண்கள் கூறிய பின்னரே ஓட்டுனருக்கு தெரிந்தது. கட்டட கழிவுகளை அகற்றியபோது, தாயம்மா சடலமாக கிடந்தார். ராய்ச்சூர் போலீசார், ஓட்டுனரை கைது செய்தனர்.

