ADDED : ஏப் 16, 2024 06:40 AM

துமகூரு, : ''நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே உண்டு. சோமண்ணாவுக்கு ஓட்டு போட்டு, மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்,'' என ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
துமகூரின் ஊர்திகெரேயில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில், தேவகவுடா பேசியதாவது:
குமாரசாமியை முதல்வராக்கியது, சோனியா என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், என்னை துமகூரில் நிறுத்தி, காங்கிரசார் தோற்கடித்தனர். அரசியலில் யாரையும் நம்ப முடியவில்லை.
காங்கிரசின் வாக்குறுதி வலையில் விழ வேண்டாம். ஏழைகள், விவசாயிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். காங்கிரசார் போன்று பொய் வாக்குறுதிகளை அளித்து காலம் தாழ்த்தவில்லை.
நாட்டை ஆளும் சக்தி மோடிக்கு மட்டுமே உண்டு. சோமண்ணாவுக்கு ஓட்டு போட்டு, மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

