ADDED : மே 26, 2024 06:52 AM

பெங்களூரு: வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நாளை பெலகாவி, பெங்களூருக்கு வருகிறார்.
ஒரு நாள் பயணமாக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம், நாளை காலை பெலகாவி சாம்ப்ரா விமான நிலையத்துக்கு வருகிறார்.
பெலகாவியில், தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தின் நிறுவன நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார்.
பின், அங்குள்ள, கே.எல்.இ., பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கிறார். சிறப்புரையும் நிகழ்த்துகிறார்.
அதன் பின், சிறப்பு விமானம் மூலம், பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம், பழைய விமான நிலையத்தின் பின்புறம் உள்ள, என்.ஏ.எல்., எனும் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் பேலுார் மையத்துக்கு சென்று, எல்.சி.ஏ., சரஸ் ரக விமான உபகரணங்களின் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
அங்கேயே, சில புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறார். இறுதியில், கர்நாடக ராஜ்பவனுக்கு சென்று, அன்றிரவே டில்லி திரும்புகிறார்.
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, அவர் பயணம் செய்யும் சாலைகள், பங்கேற்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.