தர்ஷன் அறையில் இருந்த 'டிவி' எடுத்து சென்ற சிறை ஊழியர்கள்
தர்ஷன் அறையில் இருந்த 'டிவி' எடுத்து சென்ற சிறை ஊழியர்கள்
ADDED : செப் 12, 2024 05:42 AM
பல்லாரி: ரேணுகாசாமி கொலை வழக்கில் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட, 'டிவி' அடிக்கடி மக்கர் செய்ததால், அதை சிறை ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
நடிகர் தர்ஷன் தோழி பவித்ராவுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பியதால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவர் ஜூன் 8ம் தேதி பெங்களூரு ஆர்.ஆர்., நகர் பட்டனகெரே ஷெட்டில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன், தற்போது பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அறை பகுதியை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அவரது நீதிமன்றக் காவல் இன்று நிறைவு பெறுகிறது. இன்று காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது, தர்ஷனுக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், வெளியுலக நடப்புகளை அறிந்து கொள்ள சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து, தர்ஷன் தனக்கு ஒரு 'டிவி' வாங்கியிருந்தார். அந்த, 'டிவி' அடிக்கடி பழுதானதாக கூறப்படுகிறது.
வேறு டிவி மாற்றித் தரும்படி அவர் கேட்டிருக்கிறார். அதற்கு சிறை அதிகாரிகள் மறுத்ததால், டிவியை திரும்ப எடுத்துச் செல்லும்படி தர்ஷன் கூறியதாகவும், அவர் அறையில் இருந்த டிவி அகற்றப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.