ADDED : செப் 07, 2024 07:50 AM

சாம்ராஜ்நகர்: கர்நாடகாவின் ஒரே கவுரி கோவிலில் நேற்று கோலாகலமாக பண்டிகை துவங்கியது. இது 12 நாட்கள் நீடிக்கும்.
அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு முதலில் பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் குதேர் கிராமத்தில் உள்ள, கவுரி கோவிலில் கவுரிக்கு பூஜை செய்த பின்னரே, விநாயகருக்கு பூஜை நடக்கிறது.
சாம்ராஜ்நகரின், குதேர் கிராமத்தில் கவுரி கோவில், கர்நாடகாவில் உள்ள ஒரே கவுரி கோவிலாகும். பொதுவாக கவுரிக்கு எங்கும் தனி கோவில் இல்லை. கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில், கவுரியை பிரதிஷ்டை செய்து, 12 நாட்கள் பூஜை, புனஸ்காரங்கள் செய்து, நீரில் கரைக்கின்றனர்.
மற்ற இடங்களில் ஒரு நாள் மட்டுமே, கவுரி பண்டிகை கொண்டாடுகின்றனர். குதேர் கிராமத்தில் 12 நாட்கள் கவுரி பண்டிகை கொண்டாடுகின்றனர்.
நேற்று காலையில் கிராமத்தின் தொட்டகெரே அருகில் சிறப்பு ஹோமங்களுடன் மணலில் கவுரி சிலை தயாரிப்பர்.
இதை கிராமத்தின் முக்கியமான ரோடுகளில் ஊர்வலம் நடத்தி, கிராமத்தின் சுவர்ண கவுரி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவிலுக்கு வந்து கவுரி சீர் வரிசை சமர்ப்பித்தனர்.
சுவர்ண கவுரியை பூஜித்தால், விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக திருமணம் ஆகாதோருக்கு, திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியதும், இங்கு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.