ADDED : மே 30, 2024 10:00 PM
பீதர், --மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
திருட்டு வழக்கில் ரசூல், 35 என்ற ரவுடியை, கடந்த சில தினங்களுக்கு முன்பு பீதர் நியூ டவுன் போலீசார், கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அவரை ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நகரில் உள்ள சாய் பள்ளி மைதானம் அருகே ஜீப் சென்றது. அப்போது போலீசாரை தள்ளிவிட்டு ஜீப்பில் இருந்து ரசூல் குதித்தார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார்.
ஆனால் ரசூல், இன்ஸ்பெக்டரின் இடது கையில், கத்தியால் தாக்கி விட்டு ஓட முயன்றார். இதனால் அவரை நோக்கி, இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுட்டார்.
ரசூலின் வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவரை போலீசார் மீட்டு, பீதர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரசூலுக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கலபுரகியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர், கலபுரகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.